
தாவாவ், பிப்ரவரி-28 – சபா, லாஹாட் டத்து தொழில் பயிற்சி கல்லூரி மாணவர் Mohamad Nazmie Aizzat-டை கும்பலாகக் கொலைச் செய்த வழக்கில், பதின்ம வயது மாணவர்கள் 13 பேர் தற்காப்பு வாதம் புரிய உத்தரவிடப்பட்டுள்ளனர்.
16 முதல் 19 வயதிலான அவர்கள் அனைவர் மீதான கொலைக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை அரசு தரப்பு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.
எனவே அவர்களை எதிர்வாதம் செய்ய அழைப்பதாக, தாவாவ் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ Duncan Sikodol அறிவித்தார்.
அவ்வகையில், சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாண வாக்குமூலம் அளித்து, பின்னர் அரசுத் தரப்பால் குறுக்கு விசாரணையைச் சந்திப்பது;
அல்லது சாட்சிக் கூண்டில் சத்தியப் பிரமாணம் எடுக்காமல் வாக்குமூலம் அளித்து குறுக்கு விசாரணையைத் தவிர்ப்பது;
அல்லது எதுவும் சொல்லாமல் அமைதி காப்பது என 13 பேருக்கும் நீதிபதி 3 தேர்வுகளை வழங்கியுள்ளார்.
இதையடுத்து வரும் மார்ச் 10 முதல் 14 வரை தற்காப்பு வாதம் தொடங்குகிறது.
கடந்தாண்டு மார்ச் 21-ஆம் தேதி இரவு 9 மணிக்கும் மறுநாள் காலை 7.38 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில், அக்கொலையைப் புரிந்ததாக அந்த 13 பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் 12-க்கும் மேற்போகாத பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.