லுமுட் , டிச 12 – பேராவில் லுமுட் மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளை பெரிய அளவில் கவரும் தெலுக் பாத்தேக் ( Teluk Batik ) கடல் பகுதியில் முதலை நடமாடும் காணொளியை மஞ்சோங் மாவட்டத்தின் APM எனப்படும் பொது பாதுகாப்புப் படை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த காணொளி வைரலாகியுள்ளது. முன்பெல்லாம் ஆற்றுப் பகுதிகளில்தான் முதலைகளை காணமுடியும்.
அண்மையக் காலமாக தற்போது கடல் பகுதிகளிலும் முதலைகள் நடமாட்டம் இருப்பது மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுக் பாத்தேக் ( Teluk Batik ) கடல் பகுதியில் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் மக்கள் குடும்பத்தோடு வந்து கடலோரத்தில் தங்கி தங்களது பொழுதை போக்குகின்றனர். இந்த நிலையில் அந்த கடல் பகுதியில் முதலை இருப்பது நிருபணமாகியிருப்பதால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
இந்த வேளையில் தெலுக் பாத்தேக் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறார்கள் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி பேரா APM அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதோடு கடலில் தங்களது பிள்ளைகள் குளிக்கும்போது அவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.