
கோலாலாம்பூர், ஜூன்-10 – மலேசியாவின் மிக நீண்ட கால பிரதமர் என்ற பெருமைக்குரிய துன் Dr மகாதீர் மொஹமட் இன்று தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
நாட்டின் நவீன தந்தையாக வர்ணிக்கப்படும் மகாதீரின் வண்ணமயமான இந்த நூற்றாண்டு வாழ்க்கையில் மேடு பள்ளங்களுக்குக் குறைவில்லை.
70, 80 ஆண்டு பொது வாழ்க்கையில் அவர் சந்திக்காத அரசியல் ஏற்றங்களும் இல்லை, தாழ்வுகளும் இல்லை.
2 வெவ்வேறு காலக் கட்டங்களில் 2 முறை பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையும், கடைசித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர் என்ற கசப்பான அனுபவமும் அவருக்குண்டு.
சர்ச்சைக்குரிய பேச்சுகளால் அவ்வப்போது கடும் விமர்சனங்களுக்கு ஆளானாலும், பல தசாப்தங்களாக அரசியல் செல்வாக்குடன் இன்னமும் யாராலும் தவிர்க்க முடியாத ஒரு நபராக அவர் வலம் வருகிறார்.
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், கோலாலாம்பூர் கோபுரம், KLIA விமான நிலையம், புத்ராஜெயா, புரோட்டோன் கார், கிழக்கே நோக்கும் கொள்கை என, காலம் கடந்தும் மகாதீர் பெயர் சொல்லும் விஷயங்கள் இங்கே ஏராளம்.
100 வயதிலும் சுறுசுறுப்புடன் இயங்குவதும், அவ்வப்போது சொந்தமாகவே காரோட்டிச் செல்வதும், வெளிநாடுகளில் அரசியல் – பொருளாதார மாநாடுகளில் பங்கேற்பதும் மகாதீர் என்ற இந்த பெருந்தலைவர் ஒருவருக்கே சாத்தியம்.