
வாஷிங்டன், ஏப்ரல்-8, அமெரிக்காவின் பதிலடி வரி விதிப்பிலிருந்து தப்பிக்க விரும்பும் நாடுகள், தாராளமாக பேச்சுவார்த்தைக்கு வரலாம்.
அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் அந்நாடுகள் நேரடியாகப் பேசலாமென, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகள் நியாயமான பரிந்துரைகளுடன் வரும் பட்சத்தில், கூடுதல் வரி விகிதத்தை டிரம்ப் குறைக்கத் தயாராக இருக்கிறார்.
எனவே, பேச்சுவார்த்தை வந்தால் தலைத் தப்பும்; அதை விடுத்து அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் பதிலடி வரி விதிப்பை அமுல்படுத்தினால், சம்பந்தப்பட்ட நாடுகள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் Stephan Miran அவ்வாறு எச்சரித்தார்.
உலக வாணிபத்தில் அமெரிக்கா கூடுதல் பலம் பெற்றுத் திகழ்ந்தாலும், தயாரிப்புத் துறையில் இன்னமும் சமச்சீரற்ற நிலையே காணப்படுகிறது.
இதனால் தான், ஏராளமான நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு உயரிய வரியை விதிக்கின்றன; இதனை இனியும் அனுமதிக்க முடியாது என்பதால் தான், இந்த கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சீனா உட்பட ஏராளமான நாடுகளுடனான வாணிப பேச்சுவார்த்தையில் டிரம்ப் ஏற்கனவே வெற்றிக் கண்டிருப்பதையும் Miran சுட்டிக் காட்டினார்.
அமெரிக்கா மொத்தமாக விதித்த 54 விழுக்காட்டு வரிக்கு பதிலடியாக சீனா முன்னதாக 34 விழுக்காடு வரியை அறிவித்தது.
இதனால் கடும் சினமடைந்த டிரம்ப், கூடுதலாக 50 விழுக்காடு வரியை விதிப்பதாக அறிவித்து அதிர வைத்தார்.
அதே சமயம், வரி விகிதம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படுமென்றும் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.