Latestமலேசியா

வழிபாட்டு தலங்கள் தொடர்பான நீண்டகால பிரச்னைக்கு தீர்வு தேவை; சிவமலர் வலியுறுத்து

வழிபாட்டு தலங்கள் தொடர்பான நீண்டகால பிரச்னைக்கு தீர்வு தேவை; சிவமலர் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப்ரவரி-10,

மலேசியாவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமலிருக்கும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்கள் தொடர்பான பிரச்னையை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பி.கே.ஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் அதன் மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினருமான சிவமலர் கணபதி அவ்வாறுக் கூறியுள்ளார்.

மற்றவர் நிலத்தில் அனுமதியில்லாமல் இஷ்டம் போல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளது பற்றி கருத்துரைக்கையில் அவர் அவ்வாறு சொன்னார்.

பல தசாப்தங்களாக, ஆலயங்கள், கோவில்கள், தேவாலயங்கள் போன்றவை “சட்டவிரோதம்” எனக் குறிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவை பெரும்பாலும் காலனித்துவ காலத்திலும் சுதந்திரத்தின் ஆரம்ப காலக்கட்டத்திலும் தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்களுக்காக, நில உரிமையாளர்களின் அனுமதியுடன் கட்டப்பட்டவை.

பின்னர் நிலம் விற்கப்பட்டதும், பிரிக்கப்பட்டதும், புதிய சட்ட முறைகளில் பதிவு செய்யப்பட்டதும், இத்தலங்கள் திடீரென “அத்துமீறல்” எனக் கருதப்பட்டன; கருதப்படுகின்றன…

பல தலைமுறைகளாக அமைதியாக இருந்த வழிபாட்டு தலங்கள் தற்போது சட்ட சிக்கலில் சிக்கின.

சட்டத்தின் மாண்பும் அதன் அமுலாக்கமும் முக்கியம்; அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், வரலாற்று உண்மைகளை புறக்கணித்து, எல்லா வழிபாட்டு தலங்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது நியாயமல்ல.

புதிய சட்டவிரோத கட்டுமானங்களை பாதுகாக்க முடியாது. ஆனால், பழமையான வழிபாட்டுத் தலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என சிவமலர் கேட்டுக் கொண்டார்.

இதற்காக, மத்திய அரசாங்க மட்டத்தில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உரிய உரிமைகள், நீண்டகால குத்தகைகள், நில மாற்றங்கள் அல்லது மரியாதையான இடமாற்றங்கள் போன்ற தீர்வுகளும் முக்கியம்.

என்றாலும் சட்ட அமுலாக்கம் கடைசி தேர்வாகவே இருக்க வேண்டும்.

மாறாக கலந்துரையாடல், சமரசம், நிர்வாக தீர்வுகளே முதலில் வர வேண்டும்.

வரலாற்று வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பது சட்டத்தை பலவீனப்படுத்துவதல்ல. அதே சமயம் சட்டத்தை நிலைநிறுத்துவதால் வரலாற்றை மறுப்பதாக ஆகாது.

எனவே, இதனை மத பிரச்னையாக அல்லாமல் நிர்வாகப் பிரச்னையாகக் கருதி மலேசியா, தாமதமின்றி, துணிச்சலான தலைமைத்துவத்தால் இந்த நீண்ட நெடிய சிக்கலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென சிவமலர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!