
வாஷிங்டன், மார்ச்-18-ஈரான் போரின் நடுவே, வாஷிங்டனில் முதல் பெரிய ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கெண்ட் (Joseph Kent) பதவி விலகியுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மற்றும் தேசிய உளவுத் துறை இயக்குநருக்கு ஆலோசனை வழங்கி வரும் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர் இவர்.
இந்நிலையில், “இந்தப் போருக்கு ஆதரவு அளிக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை” என X தளத்தில் அவர் திடீரென பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானால் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
ஆனால், இஸ்ரேலின் தன்மூப்பான அழுத்தமும் அமெரிக்க ஊடகங்களின் தவறான தகவல்களும் போலி அச்சுறுத்தலை உருவாக்கி, இந்தப் போரைக் கட்டியெழுப்பியதாக கெண்ட் குற்றம் சாட்டினார்.
2003 ஈராக் போரும் இப்படித்தான் போலியாகக் கட்டமைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த இஸ்ரேல்/அமெரிக்கா – ஈரான் போரில் ஈரானில் மட்டும் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; லெபனானில் 880 பேர், இஸ்ரேலில் 12 பேர், அமெரிக்க வீரர்களில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், இந்தப் போர் “அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் தராது என்பதே நிதர்சனம்” என்றார் அவர்.
இது தொடரும் பட்சத்தில் விளைவுகள் மோசமடையலாம் என, பெரிதும் மதிக்கப்படும் முன்னாள் போர் வீரருமான கெண்ட் குறிப்பிட்டார்.
ஈரான் மீதான பிடியை அமெரிக்கா இறுக்கி வரும் நிலையில், வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள இந்த வெளிப்படையான பிளவு பேசுபொருளாகியுள்ளது.



