
பேங்காக், ஜூலை 17 – தாய்லாந்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் pikap டிரக்கின் பின்புறத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதன் காரணமாக, அதில் இருந்த டுரியான் பழங்களின் முற்களினால் அவரது முகம் துளைக்கப்பட்டதால் பயங்கரமான சூழ்நிலைக்கு உள்ளானார்
இந்த பரிதாபமான சம்பவத்தினால் 48 வயதான அந்த நபர் முகத்தில் காயங்களுக்கு உள்ளானதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தாய்லாந்து ஊடகமான சேனல் 7 இன் படி, இந்த சம்பவம் ஜூலை 15 செவ்வாய்க்கிழமை மாலை புரிராம் மாநிலத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சோம்சாய், வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் டொயோட்டா பிக்கப் டிரக்கின் பின்புறத்தில் மோதியதாகக் கூறினார். தாம் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டவில்லை என்றும் மாறாக அந்த பிக்அப் லோரி திடீரென நிறுத்தப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் என அவர் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த மீட்பு பணியாளர்கள் அந்த பிக்அப் லோரியில் இரத்தக் கறை படிந்த டுரியான் பழங்களை கண்டனர். மீட்புப் பணியாளர்கள் வந்தபோது, சோம்சாய் ஒரு மரத்தின் கீழ் பலவீனமாக அமர்ந்திருந்ததோடு அவரது முகம் முழுவதும் துளையிடப்பட்ட அடையாளங்கள் தெரிந்தன.