சென்னை, நவம்பர்-19 – புதியத் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்க வளாகங்களில் YouTube ஊடகங்கள் இரசிகர்களிடம் பேட்டி எடுப்பதை தடைச் செய்ய வேண்டும்.
தமிழகத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அவ்வாறுக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேட்டி என்ற பெயரில் முதல் நாளே படத்துக்கு மோசமான விமர்சனங்களைக் கொடுத்து விடுவதால், பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியாகும் படங்கள் படுதோல்வியைச் சந்திக்கின்றன.
எனவே புதியப் படங்கள் வெளியாகும் அன்று திரையரங்க வளாகங்களில் இரசிகர்களிடம் பேட்டி எடுக்க
சினிமா YouTube பக்கங்களை திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல சினிமா என்றாலும், படத்தின் மீதான உங்களின் கருத்துகளை மக்களிடம் திணிக்காதீர்கள் என்றார் அவர்.
பெரும் பொருட்செலவில் நடிகர் சூர்யா நடித்து கடந்த வாரம் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்திற்கு, முதல் நாளிலிருந்தே சமூக ஊடகங்களில் படுமோசமான விமர்சனங்கள் குவிந்து வருவது பேச்சுப் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.