
ஹனோய், செப்டம்பர்-28,
வியட்நாமில் இன்று புயல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் புவாலோய் (Bualoi) சூறாவளி, மத்திய வியட்நாமை இன்றிரவு கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இதனையடுத்து Ha Tinh மாகாணத்தில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் ஆயிரக்கணக்கில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டானாங் (Danang) அனைத்துலக விமான நிலையம் உட்பட நான்கு கடலோர விமான நிலையங்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
பல விமானச் சேவைகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
புயல் பல்வேறு பேரிடர்களை ஒரே நேரத்தில் ஏற்படுத்தக்கூடும் — அதில் பலத்த காற்று, கனமழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் கடலோர வெள்ளம் ஆகியவை அடங்குமென, வானிலை மையம் எச்சரித்தது.
ஏற்கனவே சில மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடல் கடற்கரையை நீண்டதாகக் கொண்ட வியட்நாமுக்கு, இதுபோன்ற சூறாவளி சீற்றம் புதிதல்ல.
கடந்த ஆண்டு ஜூலையில் கூட ‘யாகி’ சூறாவளி வியட்நாமைத் தாக்கியதில் 300 பேர் உயிரிழந்து, 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.