
கோலாலம்பூர், ஜனவரி 23 – எதிர்வரும் சீனப் புத்தாண்டு உட்பட விழாக் காலங்களின் போது இலவச டோல் கட்டணச் சலுகையை வழங்குவதை நிறுத்தும் முடிவை, அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் அதனை வலியுறுத்தியுள்ளார்.
இலவச டோல் கட்டணச் சலுகையானது மக்களின் நிதிச் சுமையை மட்டும் குறைக்கவில்லை; உள்ளூர் பொருளாதாரத்தையும் அது ஊக்குவிக்கிறது.
விழாக் காலங்களில் மக்கள் நடமாட்டம் பேரளவில் உள்ளது; இதன் மூலம் சிறு குறு வியாபாரிகள், உணவங்காடி நடத்துநர்கள், விருந்தோம்பல் துறையினர் என அனைத்து மட்டங்களையும் சேர்ந்த வியாபாரிகள் நன்மையடைகின்றனர்.
நேர்மறையான இந்த பொருளாதாரத் தாக்கம், இலவச டோல் கட்டணச் சலுகைக்கு அரசாங்கம் செலவிடும் தொகையை ஈடுகட்டுமென, Dr லிங்கேஷ் தெரிவித்தார்.
இவ்வேளையில், ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையாவும் அரசாங்கத்தின் அம்முடிவு குறித்து கவலைத் தெரிவித்துள்ளார்.
டோல் கட்டணத்தை அகற்றுவோம் என முன்பு நாம் வாக்குறுதி அளித்திருந்தோம்; அது நடக்காத பட்சத்தில், இந்த பெருநாள் கால இலவச டோல் கட்டணச் சலுகையாவது மக்கள் மீதான அரசாங்கத்தின் பரிவைக் காட்டி வந்தது.
இப்போது அதையும் எடுத்து விட்டால் பெருநாள் கொண்டாட ஊர் திரும்பும் மக்களுக்கு சுமையாக இருக்காதா என முருகையா கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
எனவே, இவ்விஷயத்தில் அரசாங்கம் அதன் முடிவை மறுபரிசீலனை செய்து மக்களின் மனம் குளிரச் செய்ய வேண்டும் என இருவரும் கேட்டுக்கொள்கின்றனர்.