
கோலாலம்பூர், மார்ச்-5 – மலேசிய இந்துக்களின் மனதைக் காயப்படுத்திய ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில், ஏரா வானொலி நிர்வாகமும் அதன் தாய் நிறுவனமான ஆஸ்ட்ரோவும் மனதார மன்னிப்புக் கேட்டது போல் தெரியவில்லை.
ஏதோ ஒப்புக்குச்சப்பாணியாக கடமைக்குக் கேட்டு வைப்போம் என்பது போல அவ்வறிக்கை உள்ளதாக, பேராக் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் உண்மையிலேயே தவற்றை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட வானொலி அறிவிப்பாளர்கள் மன்னிப்புக் கோரி வெளியிட்ட வீடியோவும் அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது.
எனவே உண்மையிலேயே மனம் வருந்தி மனதார மன்னிப்புக் கேட்கும் வீடியோவை அதன் நிர்வாகம் வெளியிட வேண்டும்.
தைப்பூசக் கொண்டாட்டங்கள் முடிந்த ஒரு மாதத்திற்குள் இந்துக்களின் மனதை இப்படி காயப்படுத்தியுள்ளீர்கள்;
இதை ஏற்றுக்கொள்ள முடியாது என facebook வீடியோவில் குறிப்பிட்ட துள்சி, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆக வேண்டுமென்றார்.
இவ்வேளையில், பினாங்கு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் Syerleena Abdul Rashid-டும் ஏரா அறிவிப்பாளர்களின் செயலைக் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
மற்ற மதத்தாரின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் இழிவுப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.
எனவே இந்த ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சை மன்னிப்புக் கேட்டு விட்டதால் முடிந்து விடாது.
இனி மற்றவர்களுக்கும் ஒரு பெரியப் பாடமாக இருக்கும் வகையில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, Syerleena வலியுறுத்தினார்.