புத்ராஜெயா, செப்டம்பர் 3 – ஹரிமாவ் மலாயா என அழைக்கப்படும் மலேசியத் தேசிய காற்பந்து அணியின் வீரர்களின் நலன் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியின் வழி, எதிர்காலத்தில் ஆசியாவில் மிகச் சிறந்த காற்பந்து குழுவாக உருவெடுக்க, முறையான பயிற்சி ஹரிமாவ் மலாயாவிற்கு கிடைக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹரிமாவ் மலாயா சிறந்து விளங்க, தேசிய அணியின் வீரர்கள், மேலாளர் மற்றும் பயிற்றுநர்கள் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கு, அவர்களின் நலனைக் கவனித்துக்கொள்வது முக்கியம் என்றும் அவர் சுட்டுக்காட்டினார்.
மலேசியாவிற்கு உறுதியான பொருளாதாரம் மட்டுமல்ல, நாட்டின் பெயரை அனைத்துலக அரங்கில் கொண்டு வரக்கூடிய ஒரு சிறந்த தேசிய காற்பந்து அணியைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இலக்காகும் என்றார் பிரதமர்.
இந்நிலையில், மலேசியக் காற்பந்து சங்கத்தைச் சந்தித்து அரசாங்கத்தின் இந்த முடிவைக் கூறவுள்ளதையும் நேற்று நிதியமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.