
பூச்சோங், ஏப்ரல்-11 இன்று அதிகாலை 1 மணியிலிருந்து பெய்த அடைமழையால் சிலாங்கூரில் குறைந்தது 5 மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.
பெட்டாலிங், கிள்ளான், செப்பாங், உலு லங்காட், கோம்பாக் ஆகியவையே அம்மாவட்டங்களாகும்.
பூச்சோங், ஷா ஆலாம், கிள்ளான் உள்ளிட்ட இடங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதாக தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
இதனால் காலை சாலைப் போக்குவரத்து மணிக்கணக்கில் நிலைக் குத்தியது.
பல இடங்களில் வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு நிலைமை இருந்ததால், வேலைக்குச் செல்வோரும் பள்ளிப் பிள்ளைகளும் அவதிப்பட்டனர்.
இவ்வேளையில் கிள்ளான் தாமான் ஸ்ரீ மூடாவில் விடியற்காலை 2.30 மணியிலிருந்து மழை விடாமல் பெய்ததாக அப்பகுதி வாழ் மக்களில் ஒருவர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
கம்போங் பாரு ஹைகோம், கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் பாடாங் ஜாவா, தாமான் முத்தியாரா, பெக்கான் மேரு போன்ற இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அடை மழையோடு கடல் பெருக்கும் ஏற்பட்டதால் நிலைமை மோசமானது.
காலை நிலவரப்படி கிள்ளான் ஆற்றிலும் லங்காட் ஆற்றிலும் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது.
இதையடுத்து சில இடங்களில் பாதுகாப்புக் கருதி மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
திடீர் வெள்ளத்தால் கிள்ளான், காப்பார், கம்போங் மேருவில் 26 பேர் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக APM எனப்படும் பொது தற்காப்புப் படை கூறியது.