
கோலாலம்பூர், செப்டம்பர்-21,
சமத்துவ உரிமைகளை நடைமுறைப்படுத்தும் முதல் படியாக தேசியக் கல்வி முறையை வலுப்படுத்த வேண்டுமென, முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
“நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தொடங்குகிறது” என்றார் அவர்.
மலேசியக் கல்வி முறையானது சமூகத்தைப் பிரித்து, பலர் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதால், சமூகங்களுக்கு இடையில் பிரிவு மற்றும் நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது.
எனவே வலுவான தேசியக் கல்விக் கொள்கையால் மட்டுமே பூமிபுத்ரா சமூகத்தின் அச்சங்களை நீக்க முடியும்.
இது, இன அடிப்படையிலான கொள்கைகளை அகற்ற வழி வகுக்கும் என்றார் அவர்.
அதற்காக ஆசிரியர்களின் தரம், பாடத்திட்டம், மற்றும் பள்ளி கட்டமைப்பு வசதிகளில் மாற்றம் அவசியமாகும்;
அதோடு தினசரி நிர்வாகத்தை மட்டும் நடத்தாமல் துணிச்சலான மாற்றங்களை முன்னெடுக்கும் ஒரு கல்வி அமைச்சரை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என, பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான அவர் வலியுறுத்தினார்.
தற்போதையக் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், பி.கே.ஆரின் மகளிர் பிரிவுத் தலைவி ஆவார்.