Latestமலேசியா

அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புமிக்க, மக்களை மையமாகக் கொண்டது 2026 பட்ஜெட்: தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு

கோலாலாம்பூர், அக்டோபர்-11,

2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ‘அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்’ என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பாராட்டியுள்ளார்.

STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவி, SARA எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவி போன்ற நிதியுதவிகள் 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளன; இது அடிதட்டு மக்கள் மீது மடானி அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.

அதேபோல், இந்தியச் சமூக முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளையும் விக்னேஸ்வரன் பாராட்டினார்.

குறிப்பாக SJKP எனப்படும் வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி RM1.9 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது; தவிர, மித்ரா, தெக்குன் நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா வழியாக RM220 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் இந்தியச் சமூகத்தின் தொழில் முனைவுத் திறனையும் பொருளாதார வலிமையையும் மேம்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வேளையில், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகள் குறிப்பாக TVET-க்கு RM7.9 பில்லியன் ஒதுக்கீடு, AI மற்றும் semiconductor பயிற்சிகள், PLKN தேசிய சேவைப் பயிற்சி திட்டம் மீண்டும் தொடங்கியது போன்றவற்றில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியிருப்பதையும் அவர் வரவேற்றார்.

பொது மக்களின் நலனும் சமூக இணக்கமும் வலுப்பெற வேண்டி ம.இ.கா தொடர்ந்து செயல்படும் என்றும், இது 13-ஆவது மலேசியத் திட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப அமைவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

RM470 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ‘மக்கள் பட்ஜெட்’ என்ற கருப்பொருளில், பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மக்களவையில் 2026 பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!