
கோலாலம்பூர், செப் 12 – கம்போங் சுங்கை பாரு குடியிருப்புவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையின்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக கொலை மிரட்டலை விடுத்த ஆடவர் மீது Keadilan இளைஞர் பிரிவு இரு போலீஸ் புகார்களை செய்துள்ளது.
இதனை உறுதிப்படுத்திய டாங் வாங்கி போலீஸ் துணைத்தலைவர் Superintendent நுசுலான் முகமட் டின் ( Nuzulan Mohd Din), புக்கிட் அமான் குற்றவியல் விசாரணை பிரிவு விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார்.
நேற்றிரவு 8 மணியளவில் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் Keadilan இளைஞர் பிரிவு இந்த புகார்களை செய்ததாக கோலாலம்பூர் பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் தகவல் பிரிவு தலைவர் முகமட் ரய்ஸ் ஹம்டான் (Mohammad Rais Hamdan ) செய்தியாளர்களிடம் கூறினார்.
நாட்டின் நீண்ட கால ஐக்கியத்திற்கு கீழறுப்பை ஏற்படுத்தும் இத்தகைய மிரட்டல்களை இளைஞர்கள் கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் ஆடவர் ஒருவர் அன்வாருக்கு மிரட்டல் விடுப்பதை காட்டும் TiK Tok காணொளி வைரலானது.
அந்த நபர் இதற்கு முன் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதாகவும் கூறிக்கொண்டார்.