
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சமாதானம் செய்துக் கொள்ள தாம் தயார் என, துன் Dr மகாதீர் முஹமட் கூறியிருக்கிறார்.
மக்கள் பணத்தைத் திருடியதாக தம்மைக் குற்றஞ்சாட்டிய அன்வார், அது உண்மையல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே அந்நிபந்தனையாகும்.
அதோடு பத்து பூத்தே தீவு பிரச்சினையில் தம்மை தேச துரோகி என அன்வார் சுமத்திய குற்றச்சாட்டும் முற்றிலும் அபத்தமானது;
அக்குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அன்வார் இன்று வெளியிடுவார் நாளை வெளியிடுவார் என காத்திருந்து 2 வருடங்களாகி விட்டது; ஆனால் இன்னும் அவர் அமைதியாகவே இருப்பதாகவும் மகாதீர் கூறினார்.
மேலும் கருத்துரைத்த அந்த முன்னாள் பிரதமர், தமக்கும் அன்வாருக்கும் இப்போது மட்டும் சுமூகமான உறவு இருந்தால், நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்னைகளை இணைந்து தீர்வுக் காணலாமென்றார்.
ஆனால் பிரச்னை என்னவென்றால், பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான அன்வார், மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பவர் அல்ல என மகாதீர் கூறிக் கொண்டார்.
இவ்வேளையில், மலேசியா வந்த சில வெளிநாட்டுத் தலைவர்கள் தம்மைச் சந்திப்பதை அன்வார் தடுத்துள்ளதாகவும் மகாதீர் குற்றம் சாட்டினார்.
இரண்டு மூன்று வெளிநாட்டுத் தலைவர்கள் அப்படி தடுக்கப்பட்டிருப்பதாக, Apa Cerita எனும் போட்காஸ் பேட்டியின் போது, அப்பெருந்தலைவர் கூறினார்.
அந்தத் தலைவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள், மலேசியா வந்த போது என்னைச் சந்திக்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள் என மகாதீர் சொன்னார்.
மலேசிய அரசியல் அரங்கில் 40 ஆண்டுகளைக் கடந்தும் அன்வார் – மகாதீர் இடையிலான உறவு நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது.