அபராதங்களைச் செலுத்தவில்லையா? சிங்கப்பூரில் இனி நுழைய முடியாது; வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூர், அக்டோபர்-26,
சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகனமோட்டிகளின் கவனத்திற்கு…
அக்குடியரசில் செலுத்தாத போக்குவரத்து அபராதங்கள் இருந்தால், உங்களுக்கு இனி நுழைவு மறுக்கப்படலாம்.
தரை வழி எல்லைப் பகுதிகளில் சிங்கப்பூர் அதிகாரிகள் கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளதே அதற்குக் காரணம்.
மலேசியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு, செலுத்தப்படாத போக்குவரத்து, வாகன நிறுத்த அல்லது புகை வெளியேற்றக் குற்றங்களுக்கான அபராதங்கள் இருந்தால், அவர்களுக்கு அந்நாட்டில் நுழைவு மறுக்கப்படும்.
அண்மைய நடவடிக்கையில், சுமார் S$600,000 அதாவது சுமார் RM2 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை வெளிநாட்டு வாகனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது.
இது வருவாய் சேகரிப்புக்காக அல்ல, சாலை ஒழுக்கத்தை நிலைநிறுத்தவும் சட்டத்தின் நியாயத்தை உறுதிச் செய்யவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என அதிகாரிகள் கூறினர்.
எனவே, சிங்கப்பூர் எல்லையை கடக்கும் முன், அபராதங்களைச் செலுத்தியிருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள்.
இல்லையென்றால் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வந்த வழியே திருப்பி அனுப்பப்படுவீர்கள்…



