
புத்ராஜெயா, ஏப்ரல்-20, அமெரிக்காவில் தங்கியிருக்கும் அல்லது அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லும் மலேசியர்களுக்கு, விசா நிபந்தனையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை.
அவர்களுக்குப் பாதிப்பைக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு, குடிநுழைவுக் கொள்கையிலும் மாற்றமேதும் நடக்கவில்லை.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களின் விசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானாலும், அது மலேசியாவைக் குறிக்கவில்லை என அமைச்சு கூறியது.
என்ற போதிலும், நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்; ஒருவேளை மலேசியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் நிகழ்ந்தால், அது முறைப்படி தெரிவிக்கப்படும்.
அதே சமயம், அமெரிக்காவில் தங்கியுள்ள அல்லது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மலேசியர்களும், அந்நாட்டு குடிநுழைவு மற்றும் விசா கொள்கைகள் குறித்த நிலவரங்களைக் கண்காணித்து வர வேண்டுமென விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டது.
அமெரிக்கா முழுவதும் 90 பல்கலைக்கழகங்களில் குறைந்தது 600 அனைத்துலக மாணவர்களின் விசா அனுமதியை அதிபர் டோனல்ட் டிரம்ப் இரத்துச் செய்திருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகின