
லண்டன், மார்ச்-3 – வெள்ளை மாளிகையில் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் வெடித்த மோதலால் உடைந்துள்ள உறவை மீண்டும் ஒட்ட வைப்பேன் என யுக்ரேய்ன் அதிபர் Volodymyr Zelenskyy சூளுரைத்துள்ளார்.
எனினும், பொதுப்படையாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் அப்பேச்சுகள் தொடர வேண்டும் என்றார் அவர்.
எது எப்படி இருந்தாலும், அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக யுக்ரேய்ன், ரஷ்யாவிற்கு எந்த இடத்தையும் விட்டுக்கொடுக்காது என Zelensky திட்டவட்டமாகக் கூறினார்.
உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய அமெரிக்கப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு லண்டன் சென்ற Zelensky அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அமெரிக்காவுக்கு ஓர் அமைதித் திட்ட முன்வரைவை அனுப்புவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய தலைவர்கள் விவாதித்திருப்பது, ரஷ்யா – யுக்ரேய்ன் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றும் அவர் சொன்னார்.
வெள்ளிக்கிழமை நேரலையாக ஒளிபரப்பப்பட்ட சந்திப்பில், டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் இருவரும் Zelenskyy-யுடன் காரசாரமாக விவாதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Zelensky-யின் பிடிவாதத்தால் பொறுமையிழந்த டிரம்ப், ஒரு கட்டத்தில் “அமெரிக்க உதவிக்கு நீங்கள் நன்றியற்றவர், எங்கள் நாட்டுக்கு அவமரியாதை செய்கிறீர்” என கடுமையாக சாடினார்.
Zelensky-யும் சளைக்காமல் பேசிய நிலையில், “உங்களின் பிடிவாதம் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும், கவனமாக இருங்கள்” என டிரம்ப் உரத்த தொனியில் பேசினார்.
யாரும் எதிர்பாராத வகையில் அச்சந்திப்பு பாதியிலேயே முடிந்து, Zelenksky வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறக் கேட்டுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.