
கோலாலம்பூர், ஜூலை 8 – ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மலேசியா மீது விதிக்கப்படும் 25 விழுக்காடு வரி தொடர்பாக அமெரிக்காவுடன் மலேசியா தொடர்ந்து பேச்சு நடத்தும்.
அந்த பேச்சின் மூலம் நாடு பயனடைவதை உறுதிப்படுத்த அமெரிக்க நிர்வாகத்துடன் மலேசியா பேச்சு நடத்துவதை நிறுத்தாது என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஷப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் ( Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz ) தெரிவித்தார்.
நாளை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அமெரிக்காவுடனான வரிகள் குறித்து தனது தரப்பினர் செய்தியாளர் சந்திப்பை நடத்தும் என அவர் கூறினார்.
இந்த விவாதங்களில் இருந்து மலேசியா பயனடைவதை உறுதி செய்வதற்காக நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவோம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமுடன் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசிலுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்கு பின் மலேசியா திரும்புவதற்கு முன்பு Tengku Zafrul இத்தகவலை வெளியிட்டார்.
அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுக்களில் இதுவரை பிரிட்டன் மற்றும் வியட்னாம் ஆகிய இரண்டு நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளன. மற்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களுடனும் பேசியிருப்பதாகவும் அவர்களும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சு நடத்திவருகின்றனர் என தெங்கு ஷப்ருல் சுட்டிக்காட்டினார்.