
லா பாஸ் (பொலிவியா), ஏப்ரல்-6- கைலாசா என்ற பெயரில் ஒரு நாட்டுக்கு சொந்தக்காரர் எனக் கூறிக் கொண்டு வரும் நித்யானந்தா-வின் சீடர்கள் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
தென்னமரிக்க நாடான பொலிவியாவில் அமேசான் காடுகளில் பழங்குடியினருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை அபகரித்ததன் பேரில், நித்யானந்தாவின் 20 சீடர்கள் கைதாகி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அந்நிலங்களை 25 ஆண்டுகளுக்கு என முதலில் “lease” முறையில் நித்தியானந்தா சீடர்கள் ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அதனை 1,000 ஆண்டுகளுக்கு என ஆவணத்தில் சொந்தமாக மாற்றியுள்ள்தாக சொல்லப்படுகிறது. வான் பகுதி மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்தவும் அனுமதிக்கும் வகையில் ஆவணத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
இதையடுத்து நித்யானந்தாவின் சீடர்கள் அங்குச் சென்று ‘ஆன்மீக’ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒருவழியாக பொலிவியா அரசுக்கு இது தெரிய வர, பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரிக்கும் செயலெனக் கூறி, நித்யானந்தா போட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் அறிவித்தது.
உடனடியாக சோதனைக்குச் சென்ற போலீஸ் 12 சீனர்கள், 5 முதல் 7 பேர் வரையிலான இந்தியர்கள், மற்றும் ஐரோப்பா – அமெரிக்கர்கள் என 20 சீடர்களைக் கைதுச் செய்ததாக, Times of India செய்தி வெளியிட்டுள்ளது.
பழங்குடியினரிடமிருந்து ஆக்கிரமித்த நிலத்தை தான் கைலாசா என நித்தியானந்தா கூறி வந்ததாகவும் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இத்தகவல் குறித்து இதுவரை ‘கைலாசா’ நாட்டிலிருந்து இன்னும் அறிக்கை வெளியாகவில்லை.