
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-18- ம.இ.கா தனது அரசியல் உயிர்வாழ்வை உறுதிச் செய்ய விரும்புவதால், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் அது பேச்சுவார்த்தை நடத்துவதைக் குறைக் கூற முடியாது என்கிறார் உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி.
தேசிய முன்னணிக்கு விசுவாசம் தவறாத ம.இ.கா, கூட்டணியின் முக்கிய உறுப்பினரான அம்னோவை அதன் அரசியல் பின்னடைவுகளில் ஒருபோதும் கைவிட்டதில்லை.
இருப்பினும், மாறிவரும் சூழ்நிலைகளில், அம்னோவும் அதே விசுவாசத்தோடு நடந்துகொள்ளாது என்பதை ம.இ.கா உணரத் தவறிவிட்டதாக ராமசாமி கூறினார்.
“அம்னோ தனது சொந்த அரசியல் பிழைப்புக்காக DAP-யைத் தழுவிக்கொள்வது சரியென்றால், ம.இ.காவும் அதன் எதிர்காலம் கருதி பெரிக்காத்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை”என தனது பேஸ்புக் பதிவில் அவர் சொன்னார்.
ம.இ.காவின் “உண்மையான பிரச்சனையே”, தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டில் அது அம்னோவை அதிகமாகச் சார்ந்திருப்பதுதான்.
தேசிய முன்னணியில் தனது இடத்துக்கு எந்த பிரச்னையும் வராது என்ற அதிகப்படியான நம்பிக்கையில் பல ஆண்டுகளாக ம.இ.கா இருந்து விட்டது.
அதோடு, அம்னோவும் கூட்டணிக் கட்சிகளை மரியாதையுடன் நடத்துமென ம.இ.கா நம்பியிருந்தது.
ஆனால், 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்காக, பரம எதிரியாக இருந்த DAP-யுடன் ஒட்டி உறவாட முடிவெடுத்த அம்னோ, அதற்காக ம.இ.காவையும் மலேசிய சீனர் சங்கமான ம.சீ.சவையும் ஓரங்கட்டியது.
ம.இ.கா, ம.சீ.ச இரண்டையும் அம்னோவால் முதுகில் குத்த முடியும் என்றால், ம.இ.கா அதன் எதிர்காலம் தொடர்பில் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அம்னோ குறை சொல்ல முடியாது என ராமசாமி சுட்டிக் காட்டினார்.
அரசியல் ஒத்துழைப்புத் தொடர்பில் பெரிக்காத்தானுடன் ம.இ.கா அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தியதை அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அண்மையில் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்.
ம.இ.கா, தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி பெரிக்காத்தானை ஆதரிக்கும் தீர்மானத்தை, கெடா – பினாங்கு ம.இ.கா தொடர்புக் குழுக்கள் நிறைவேற்றியதை அடுத்து, இவ்விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.