
பினாங்கு, ஜூலை-15- 15 விழுக்காடு ஏற்றுமதி வரியைத் தவிர்ப்பதற்காக, பழைய இரும்பு சாமான்களை, இயந்திரங்கள் மற்றும் பிற உலோகப் பொருட்கள் என பொய்யாக அறிவித்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்ததாக நம்பப்படும் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் இயங்கி வந்ததாக நம்பப்படும் அந்தக் கடத்தல் கும்பலால், கடந்த ஆறாண்டுகளில் மட்டும் ஏற்றுமதி வரியின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 950 மில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைக்காமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
அமுலாக்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து, சட்ட நடவடிக்கையிலிருந்தும் அக்கும்பல் தப்பி வந்துள்ளது.
எனினும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நேற்று காலை ஏக காலத்தில் 5 மாநிலங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில், அக்கும்பல் சிக்கியது.
பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் கெடாவில் 19 இடங்களைக் குறி வைத்து, ஆயுதமேந்திய அதிகாரிகள் சோதனையிட்டனர்.
பழைய இரும்பு சாமான்களின் சேமிப்புக் கிடங்காக உள்ள தொழிற்சாலை வளாகங்கள், மோசடி கும்பலின் முக்கியப் புள்ளிகளின் அலுவலகங்கள், வீடுகளும் பரிசோதிக்கப்பட்டன.
பினாங்கு பத்து மாவோங்கில் (Batu Maung) ஆடம்பரக் கார்கள், lift வசதியுடன் கூடிய 3 மாடி சொகுசு பங்களாவும் அவற்றிலடங்கும்.
அந்த பங்களா, டத்தோ பட்டம் கொண்ட ஒரு நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமானதாகும்.
ஏற்றுமதி வரி ஏய்ப்பு செய்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த பழைய இரும்பு சாமான்களை அவர் கடத்தி வந்துள்ளதாக அறியப்படுகிறது.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதால், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்கள், கைதானோரின் எண்ணிக்கை போன்ற விவரங்களை MACC இன்று விரிவாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.