
கோலாலாம்பூர், அக்டோபர்-9,
Global Travel Meet 2025 இரவு விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
மக்களவையில் அது குறித்து விளக்கமளித்த சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங், நடந்தவற்றுக்கும் அமைச்சும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதே குழப்பத்திற்குக் காரணம்; அது முன்கூட்டியே தெரிந்திருந்தால், குறைந்தபட்சம் மேடையில் ஏற்பாட்டாளர் பெயரையும் சின்னத்தையாவது மாற்றியிருப்போம்.
அதற்கும் வாய்ப்பில்லாமல் போய், கடைசியில் Tourism Malaysia மீது பழி விழுந்து விட்டதாக அவர் சொன்னார்.
ஏற்கனவே சொன்னபடி, இது Tourism Malaysia-வின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி அல்ல; மதுபானங்களை பரிமாறும் நடைமுறைகளை அரசாங்கம் அங்கீகரிப்பதில்லை என்பது தமக்கும் தெரியும் என்றார் அவர்.
முன்னதாக அவ்விருந்தில் பங்கேற்றவர்கள், மதுபான கிளாஸ்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்தை கிளப்பியது.
இதனால் உடனடியாக மன்னிப்புக் கோரிய MITTA, MICA, மற்றும் MM2HCA உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசாங்க நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை தெளிவுப்படுத்தினர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், சுற்றுலா அமைச்சை கடிந்துகொண்டதோடு, அரசு சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் மதுபானம் பரிமாறக்கூடாது என மீண்டும் நினைவூட்டினார்.
இந்த சர்ச்சைகளை அடுத்து, சுற்றுலா அமைச்சு எதிர்கால நிகழ்ச்சிகளில் கடுமையான கண்காணிப்பை உறுதிச் செய்ய உறுதியளித்துள்ளது