
கோலாலம்பூர், பிப்ரவரி-28 – கடந்தாண்டு சீன, தமிழ் மற்றும் கிறிஸ்தவப் பள்ளிகளின் பராமரிப்புகளுக்கு அரசாங்கம் மொத்தமாக 213.3 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியது.
அவற்றில் 44.94 மில்லியன் ரிங்கிட் சீனப் பள்ளிகளுக்கும் 17.83 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கும், 16.19 மில்லியன் ரிங்கிட் கிறிஸ்தவப் பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்டன.
கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.
இந்த அரசாங்க உதவிப் பெற்ற பள்ளிகளில் கழிவறைகளைத் தரமுயர்த்துவதற்காக, மேலும் 134.33 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது.
இது, மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தூய்மை மற்றும் வசதியானச் சூழலை உறுதிச் செய்வதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.
இது தவிர, மாதத்திற்கு 5,000 ரிங்கிட் வரையில் பள்ளிகளின் மின்சார மற்றும் தண்ணீர் உபயோகக் கட்டணச் செலவையும் அரசாங்கமே பார்த்துக் கொள்கிறது.
அரசாங்கத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த விகிதம் மாறாமல் உள்ளது; இருப்பினும், இப்பள்ளிகளுக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில் அதனை மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளோம் என ஃபாட்லீனா சொன்னார்.
உயர்தர கல்வியை உறுதிச் செய்ய ஏதுவாக, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான ஆதரவைக் கல்வி அமைச்சு தொடர்ந்து வழங்கி வருமென்றார் அவர்.