
கோலாலம்பூர், ஜனவரி 26 – பத்துமலையில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவுக்குப் பகதர்களுக்கு வசதிகளையும் ஆன்மிக அம்சங்களையும் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம் தவறாமல் மேம்படுத்தி வருகின்றது.
அவ்வகையில், இந்த ஆண்டில், காவடி எடுக்கும் ஆற்றங்கரையில் 20 அடியளவிற்கு சக்திவேல் நிறுவப்படும் என்றார் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா.
எதிர்வரும் பிப்ரவரி 2ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், இந்தச் சக்திவேல் ஆற்றங்கரையில் ஸ்தாபிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், நுழைவாயிலிருந்து 140 அடி உயர முருகன் சிலை வரை தரையிலுள்ள கற்களைச் சீரமைப்பதற்கான பணிகள், நேர்த்திகடன்களைச் செலுத்தும் பக்தர்களுக்கான வசதியாக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதையும், சீனப் புத்தாண்டை முன்னிட்டு தற்போது விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மஹிமா தலைவரும் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு பக்தர்கள் பத்துமலையில் பக்திநெறியுடன் ஆன்மிக அனுபவத்தை பெறுவதோடு, ஒரு one-stop center போல் கலை மற்றும் கலாச்சார அம்சங்களையும் காணமுடியும், என அவர் தெரிவித்தார்.
நேற்று மற்றொரு வளர்ச்சித்திட்டமாக பத்துமலைத்திருத்தலத்தில் இயங்கும் மின்படிக்கட்டுகள் நிர்மாணிக்கப்படுவதற்கான துவக்க விழா, சிறப்பு பூஜைகளுடன் மிக கோலாகலமாக நடைபெற்றது.
இதனிடையே, பத்துமலையில் குறைகள் அல்லது புகார்களைக் கூற விரும்பினால், நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என டான் ஸ்ரீ ஆர். நடராஜா கேட்டுக் கொண்டார்.
பத்துமலை திருத்தலத்திலத்திற்கு களங்கம் ஏற்படும்படி சமூக ஊடகங்களில் தவறான காணொளிகளைப் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கப்பட்ட புகார்களுக்கு நிர்வாகம் கண்டிப்பாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது உறுதி, என அவர் கூறினார்.
1891ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடும் பத்துமலையில், இவ்வாண்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை முறையாகச் செலுத்தி மனநிறைவுடன் திரும்புவர் என்ற நம்பிக்கையை டான் ஸ்ரீ ஆர். நடராஜா வெளிப்படுத்தினார்.