
கோலாலம்பூர், ஜனவரி-19, அழிந்து வரும் காட்டு விலங்குகளில் ஒன்றான Prionailurus bengalensis எனும் சிறிய காட்டுப் பூனையை வாங்க, ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை செலவிட ஆட்கள் தயாராக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Kucing batu அல்லது சிறுத்தைப் பூனை என்றும் அழைக்கப்படும் அப்பூனைகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கள்ளச் சந்தையிலும் இணையத்திலும் விற்கப்படுகின்றன.
அரிய வகை விலங்குப் பிரியர்கள் மத்தியில் அதற்கு பெரும் வரவேற்பு உள்ளதாக, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN கூறியது.
அண்மையில் சிலாங்கூர் குவாலா லங்காட்டில் உள்ள வீட்டொன்றில் மேற்கொண்ட சோதனையில், 2 சிறுத்தைப் பூனைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
ஆனால் 6 சருகுமான்களும் Kijang எனப்படும் 1 மறிமானும் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டன.
இறைச்சிக்காகவும், விற்பதற்காகவும் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடிய 3 ஆடவர்கள் கைதாகினர்.
33,000 ரிங்கிட் மதிப்பிலானவை என நம்பப்படும் விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக PERHILITAN கூறியது.