சியோல், டிசம்பர்-4 -நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டதை அடுத்து, தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) நள்ளிரவில் தான் அறிவித்த அவசரநிலையை மீட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
வேறு வழியின்றி அதிபர் நாடாளுமன்றத்திடம் அடிபணிந்துள்ள நிலையில், பதவி விலகுங்கள் அல்லது பதவி நீக்கத்துக்குத் தயாராகுங்கள் என எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வாக்களிப்பின் போது அவையிலிருந்த அனைத்து 190 பேரும், அவசரகாலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தீர்மானத்தை முன்னதாக ஆதரித்து வாக்களித்தனர்.
இதையடுத்து அவசரநிலை பிரகடனம் செல்லாது என அறிவித்த சபாநாயகர், மக்களுடன் இணைந்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவோம் என சூளுரைத்தார்.
இராணுவச் சட்டங்களை அமுல்படுத்த வந்திருந்த போலீஸ் படையும் இராணுவமும், சபாநாயகரின் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கிருந்து பின்வாங்கின.
வட கொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென் கொரியாவை பாதுகாக்கவும், உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் ஏதுவாக அவசரநிலையை அமுல்படுத்துவதாக, அதிபர் யூன் திங்கட்கிழமை நள்ளிரவில் தொலைக்காட்சி வழி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
வட கொரியாவின் அச்சுறுத்தல் குறித்து அவர் தெளிவாகத் தெரிவிக்கவில்லை; என்றாலும் அண்மையக் காலமாகவே இரு கொரியாக்களுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
இவ்வேளையில் தேச விரோத சக்திகள் என அவர் கூறியது நாடாளுமன்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எதிர்கட்சியினரைத் தான்.
ஆரம்பக் காலக்கட்டங்களில் தொடர் சர்வாதிகார ஆட்சிகளுக்குப் பெயர் பெற்றாலும், 1980-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியா ஒரு ஜனநாயக நாடாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இராணுவச் சட்டங்களை அமுல்படுத்தி அதிபர் யூன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.