
கோலாலம்பூர், ஏப் 17 – எதிர்வரும் ஆசியான் உச்சநிலை மாநாடுகளின்போது , உயர் அதிகாரிகள் வருகையை முன்னிட்டு சாலை மூடப்படக்கூடும் என்பதால், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான திட்டத்தை அமைச்சரவை விவாதிக்கும்.
மே மாதத்தில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போதும், அக்டோபரில் நடைபெறும் கலந்துரையாடல் பங்காளிகளுடனான ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போதும் பள்ளிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்த அனுமதிப்பது குறித்தும் அமைச்சரவை விவாதிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் ( Mohamad Hasan )
தெரிவித்தார்.
சீன அதிபர் Xi Jinping வருகையின்போது சாலை மூடப்பட்டதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆலோசனைகள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் Xi Jinping வருகையின்போது சாலை மூடப்பட்டதால் சிரமத்தை எதிர்நோக்கியவர்களிடம் தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் முகமட் ஹசான் கூறினார்.
சீன அதிபரின் வருகையை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் புத்ரா ஜெயாவில் செவ்வாய்க்கிழமையன்றும், இன்றும் சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்கு 17 வழித்தடங்களின் சாலையை போலீசார் மூடியிருந்தனர்.