
ஜொஹேனஸ்பெர்க், நவம்பர்-21 – ஆதரவு கடித விவகாரத்தில் தனது அரசியல் செயலாளரை நீக்கத் தேவையில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதம் ஒரு நிறுவனத்தின் திட்டத்திற்கு ஆதரவு கோரியதாக கூறப்பட்டாலும், அதில் சட்டமீறல்கள் எதுவும் இல்லை என்றும், டத்தோ ஸ்ரீ Shamsul Iskandar Akin அது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாகவும் அன்வார் சொன்னார்.
“அந்த ஆதரவு கடிதத்தின் அடிப்படையில் திட்டம் அங்கீகரிப்பட்டதா என்பதே இங்குக் கேள்வி. யார் கடிதம் அளித்தாலும் இறுதியில் பொறுப்பு என்னிடம் தான் உள்ளது.” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அரசாங்க விதிமுறைகள் அத்தகைய ஆதரவு கடிதங்களை வழங்க அனுமதிக்காததால், தனது அரசியல் செயலாளரை கண்டித்ததாக அன்வார் செவ்வாயன்று மக்களவையில் தெரிவித்திருந்தார்.
ஆனால், வெறும் கண்டிப்பு மட்டும் போதாது, Shamsul மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியும், அன்வாரின் விளக்கம் போதுமானதாக இல்லையென்றும், Shamsul-லின் பதவி நீக்கமே சரியான நடவடிக்கையாக இருக்குமென்றும் கூறியிருந்தார்.
அது குறித்து, தென்னாப்பிரிக்காவின் ஜொஹேனஸ்பெர்க் செல்லும் வழியில் விமானத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மலேசிய செய்தியாளர்கள் கேட்ட போது பிரதமர் அவ்வாறு கூறினார்.



