
தாப்பா, ஏப்ரல்-12- ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிரதான கட்சிகளான தேசிய முன்னணி (BN), பெரிக்காத்தான் நேஷனல் (PN) இரண்டுக்கும் போட்டியாக, மலேசிய சோசலீச கட்சியான PSM-மும் போட்டியில் குதித்துள்ளது.
BN சார்பில் அம்னோவின் யுஸ்ரி பக்ரி களமிறங்கியுள்ள வேளை, பெரிக்காத்தான் தனது தாப்பா தொகுதித் தலைவரான பாஸ் கட்சியின் அப்துல் முஹாய்மின் மாலேக்கை போட்டியிடச் செய்துள்ளது.
14 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில், PSM கட்சி சார்பில் கே.எஸ். பவாணி போட்டியிடுகிறார்; 2022 நவம்பரில் நடைபெற்ற 15-ஆவது பொதுத் தேர்தலிலும் அங்கு பவாணி போட்டியிட்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த போது, தேர்தல் ஆணையம் அம்மூவரின் பெயரையும் வேட்பாளர்களாக உறுதிச் செய்தது.
இவ்வேளையில், ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி நிச்சயமாகத் தக்க வைத்துக் கொள்ளுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
என்றாலும், கடந்த முறை பெற்ற 2,213 வாக்குகள் பெரும்பான்மையை அதிகரிப்பது கேள்விக் குறியே என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
அதற்காக எதிர்கட்சிகள் பலம் பெற்றுத் திகழ்வதாக அர்த்தமில்லை; மாறாக வாக்குப் பதிவு சரியலாம் என்ற கவலையே என, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக் காட்டினார்.
வெளியூரில் உள்ள வாக்காளர்கள் அண்மையில் தான் நோன்புப் பெருநாளுக்காக சொந்த ஊர் திரும்பினர்; எனவே இந்த இடைத் தேர்தலுக்காக அவர்கள் மீண்டும் ஊர் திரும்புவார்கள் என்பது சந்தேகமே.
எனவே தான் கூடுதல் பெரும்பான்மையோடு தேசிய முன்னணி வெற்றிப் பெறும் வாய்ப்பு குறித்து, தற்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என சரவணன் கூறினார்.
இதனிடையே, ஒரு காலத்தில் வைரியாக இருந்து இன்று கூட்டணி பங்காளியாக உள்ள தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் உயர்மட்ட அளவில் ஒத்துழைத்துப் போகின்றன.
ஆனால், அடிமட்டத்தில் குறிப்பாக உயிர் தொண்டர்கள் இடையே அந்த ஒத்துழைப்பு திருப்தியளிக்கும் வகையில் இல்லை; பழசை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என சரவணனன் கூறினார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அம்னோவின் Isham Shahruddin, பிப்ரவரி 22-ஆம் தேதி காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.