
செண்டாயான், ஏப்ரல்-6- நெகிரி செம்பிலான், தாமான் புக்கிட் செண்டாயானில் எரிவாயுக் குழாய் செல்லும் பாதை, குப்பைகளைக் கொட்டுமிடமாக மாற்றப்பட்டுள்ளது.
மக்களின் அப்பொறுப்பற்றச் செயலை, வீடமைப்பு, ஊராட்சி மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.
அவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டவோ எரிக்கவோ கூடாது என எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டும், யாரும் அதனைப் பொருட்டுத்தவில்லை. 3 நாட்களுக்கு முன்னர் தான் அந்தக் குப்பைக் கொட்டுமிடத்தில் தீ ஏற்பட்டது; நல்லவேளையாக தீயணைப்பு – மீட்புப் படை விரைந்து தீயை அணைத்தது.
இல்லையென்றால் பெருந்தீ ஏற்பட்டிருக்குமென அருள் சுட்டிக் காட்டினார். சிலாங்கூர், பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸில் ஏற்பட்ட எரிவாயுக் குழாய் வெடிப்புப் போன்று இங்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
எனவே, இனியும் அங்கு யாராவது குப்பைகளைக் கொட்டுவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படுமென அருள் எச்சரித்தார். மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாக இருக்கும் வகையில் அபராதம் விதிக்கப்படுமென்றார் அவர்.
எரிவாயுக் குழாய் செல்லும் பாதையில் குப்பைகளை எரிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதை, பொது மக்கள் நினைவில் கொள்ள வேண்டுமென நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள் கேட்டுக் கொண்டார்.