
தாப்பா, மார்ச்-4 – 14,000 இளைஞர்களின் பெருவாரியான வாக்குகளைத் திரட்டுவதே, பேராக், ஆயர் கூனிங் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிச் செய்யுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறியுள்ளார்.
வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய துருப்புச் சீட்டாக விளங்குவதால், இந்த இளையோரின் வாக்குகளைக் கவர்ந்திழுக்க தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரம் வலுப்படுத்தப்பட வேண்டும்.
நல்லவேளையாக தாப்பா தேசிய முன்னிணியின் இளைஞர் பிரிவு அங்கு அடிக்கடி இளைஞர் நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மலேசியாவிலேயே இளையோர் மேம்பாட்டுத் திட்டத்தை பள்ளி அளவில் முன்னெடுத்த ஒரே நாடாளுமன்றத் தொகுதி தாப்பா தான், அதன் எம்.பியுமான சரவணன் சொன்னார்.
தாப்பா தேசிய முன்னணி தேர்தல் நடவடிக்கை அறையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு, முன்னாள் மத்திய அமைச்சருமான டத்தோ ஸ்ரீ சரவணன் அவ்வாறு சொன்னார்.
தேர்தல் காலங்கள் மட்டுமின்றி, ஆயர் கூனிங் தொகுதி மக்களுக்கு இன மத பேதமின்றி தேசிய முன்னணி தொடர்ந்து சேவையாற்றி வந்துள்ளது.
அவர்களுடனான அணுக்கமான உறவு குறிப்பாக மலாய் வாக்காளர்களின் பேராதரவோடு தேசிய முன்னணி அத்தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளுமென சரவணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இஷ்சாம் ஷாருடின் பிப்ரவரி 22-ஆம் தேதி காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.