
தாப்பா, ஏப் 8 – இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலீச கட்சியின் சார்பில் அக்கட்சியின் துணை தலைமைச் செயலாளர் பவானி கே.எஸ் வேட்பாளராக போட்டியிடுவார். இதனை பி.எஸ்.எம் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் இன்று அறிவித்தார்.
கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதியில் பவானி போட்டியிட்டபோதிலும் அப்போது நடைபெற்ற ஐந்து முனைப் போட்டியில் தேசிய முன்னணியைச் சேர்ந்த காலஞ்சென்ற Ishsham Sharudin வெற்றி பெற்றார்.
2008ஆம் ஆண்டு மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் மனோவியல் துறையில் சமூக அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற பவானி பின்னர், 2015ஆம் ஆண்டில் வட மலேசிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.
பேரா மாநில பி.எஸ் எம். கட்சியின் தலைவராகவும் மற்றும் கம்பார் பி.எஸ்.எம் கிளையின் தலைவராகவும் இருந்துவரும் அவர் அரசியலில் பரவலான அனுபவத்தை பெற்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பவானி மாலிம் நாவார் சட்டமன்ற தொகுதியில் பி.எஸ்.எம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.