
ஷா ஆலம், ஆகஸ்ட் 25 – சிலாங்கூர் மாநில அரசு, ‘கீத்தா சிலாங்கூர்’ புத்தக வவுச்சர் திட்டத்தை ஆறாம் படிவ மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் 200 ரிங்கிட் வழங்கப்படவுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ’ ஸ்ரீ அமிருதின் ஷாரி அறிவித்துள்ளார்.
தகுதியான மாணவர்களுக்கான விண்ணப்ப நடைமுறை வரும் அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிலாங்கூர் மாணவர் சங்கம் மூலம் இந்த வவுச்சர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டுக்கான புத்தக வவுச்சர் ஒதுக்கீடாக மாநில அரசு 400,000 ரிங்கிட் வழங்கியுள்ளது என்றும், மாணவர்கள் அதிக அளவில் பயனடைவதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டில் ஒதுக்கீட்டை அதிகரிக்க பரிசீலிக்கப்படும் என்றும் அமிருதின் கூறினார்.
2025 மற்றும் 2026 கல்வியாண்டில், நாட்டின் முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் 791.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் 37 ஆறாம் படிவ மையங்களில் (PTE) படிக்கும் 5,965 மாணவர்களுக்கு 894,750 ரிங்கிட் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.