
கோலாலம்பூர், செப்டம்பர்-17 – ஆகஸ்ட் 29 நிலவரப்படி, மலேசியாவின் அனைத்துலகக் கையிருப்புகள் 10 ஆண்டுகளில் இல்லாத உச்சமாக 122.7 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளன.
இது 2014 நவம்பருக்குப் பிறகு நாம் கண்டுள்ள மிக வலுவான நிலையென மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா தெரிவித்துள்ளது.
இந்தக் கையிருப்புகள் 4.8 மாதங்களுக்கான இறக்குமதியை நிதியளிக்க போதுமானவை.
மேலும், அனைத்துலக நிதியமான IMF அளவுகோலின் படி 104 விழுக்காட்டை இது எட்டியுள்ளது.
கையிருப்புகள் இரண்டு முக்கிய பங்களிப்புகளைச் செய்கின்றன:- ஒன்று, ரிங்கிட் மதிப்பில் கடுமையான ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்தி நாணயச் சந்தையை நிலைப்படுத்துவது;
இரண்டாவது, திடீர் மூலதன வெளியேற்றம் போன்ற அதிர்ச்சிகளை எதிர்கொள்ள பாதுகாப்பு கவசமாக செயல்படுவது என பேங்க் நெகாரா விளக்கியது.
கையிருப்பு நிலை குறித்த தகவல்கள் வழக்கம் போலவே ஒவ்வொரு மாதமும் முறையாக வெளியிடப்பட்டு வருமென்றும் அது உறுதியளித்தது.