
கோலாலம்பூர், நவம்பர்-28 நாட்டின் முன்னணி மூத்த தமிழ் Hip Pop இசைக் கலைஞரான யோகி பி (Yogi B) தனது இசைத்துறை வாழ்க்கையில் அடுத்த மைல் கல்லாக, இசைஞானி இளையராஜா இசையில் பாடும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விடுதலை-பாகம் 2 படத்தில் ‘பொறுத்தது போதும்’ என்ற தனிப்பாடலை அவர் பாடியுள்ளார்.
அத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள யோகி பி, இசைஞானியாரின் இசையில் பாடுவதென்பது கனவிலும் தாம் நினைத்திராத ஒன்றென நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்த தமக்கு, அவருடன் பணியாற்றும் அரிய வாய்ப்பை வழங்கிய வெற்றி மாறனுக்கு தாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
இளையராஜாவின் பெயருக்குப் பக்கத்தில் என் பெயரென்பதெலாம் அந்த கடவுளின் ஆசீர்வாதமே என யோகி பி மெய்சிலிர்த்தார்.
யோகி பி, இயக்குநர் வெற்றி மாறனுடன் பணிபுரிவது இது முதன் முறையல்ல.
அவரின் முதல் படமான ‘பொல்லாதவனில்’ மறைந்த இசை சகாப்தம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து ‘எங்கேயும் எப்போதும்’ என்ற வெற்றிப் பாடலுடன் தமிழ் திரையுலகில் காலடி வைத்தவர் தான் யோகி பி.
‘பொறுத்தது போதும்’ பாடலை தற்போது YouTube-பில் நீங்கள் கேட்க முடியும்.
சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் ‘விடுதலை-பாகம் 2’ வரும் டிசம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுவம் திரைக்கு வருகிறது.