குளுவாங், நவ 14 – கூரியர் எனப்படும் அஞ்சல் பட்டுவாடா மற்றும் போலீஸ் அதிகாரி என நடித்த இணைய மோசடி கும்பலிடம் பொறியியலாளர் ஒருவர் 343,260 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
சட்டவிரோத பண நடவடிக்கையில் 33 வயதுடைய அந்த பொறியியலாளர் ஈடுபட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறி அக்கும்பல் அவருடன் தொடர்பு கொண்டு இந்த மோசடி செய்திருப்பதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan நிக் முகமட் அஸ்மி உசேய்ன் ( Nik Mohd Azmi Husin ) தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டினால் அச்சமடைந்த அந்த பொறியியலாளர் இதிலிருந்து தீர்வு காண்பதற்கு அந்த இணைய மோசடி கும்பல் தெரிவித்த தொகையை வழங்க முன்வந்துள்ளார்.
அந்த சந்தேகப் பேர்வழிகள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு 24 தடவை பணத்தை பட்டுவாடா செய்த பின்னரும் அவர்கள் மீண்டும் பணம் கேட்டதால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் செய்ததாக நிக் முகமட் கூறினார்.
ஆகஸ்டு 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம்தேதிவரை அந்த கும்பல் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு கட்டம் கட்டமாக 343,260 ரிங்கிட்டை அவர் பட்டுவாடா செய்துள்ளார். தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக நிக் முகமட் தெரிவித்தார்.