
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7- லிம் குவான் எங் ஊழல் வழக்கில் முதன்மை சாட்சியான தாம் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவமானது, கொள்ளை முயற்சி அல்ல; மாறாக நீதிமன்றத்தில் தாம் சாட்சியமளிப்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட மிரட்டலே என, டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
வீடு புகுந்த 10 பேரடங்கிய மர்ம கும்பல், நீதிமன்றத்தில் இனியும் சாட்சியமளிக்கக் கூடாது என தம்மை மிரட்டியதாக, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டதோடு, முகத்தில் சரமாரியாகக் குத்தப்பட்டதில் வாயில் காயமேற்பட்டு, 5 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இதுவொன்றும் சாதாரண குடியிருப்பு அல்ல, பிரதமரின் அலுவலகத்திற்கு அருகில், பெரும் பாதுகாப்புடன் உள்ள இடம்.
அப்படியிருக்கையில் இது எப்படி வெறும் கொள்ளை முயற்சியாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த அத்தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தங்கள் பிள்ளைகள் அச்சம்பவத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக, ஞானராஜாவின் துணைவியார் டத்தின் ஸ்ரீ கீதாஞ்சலி ஜி. வேதனையுடன் கூறினார்.
எனவே குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி போலீஸார் இச்சம்பவத்தை விரிவாக விசாரிக்க வேண்டுமென கீதாஞ்சலி கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மற்றொரு பாதிக்கப்பட்டவர் குறித்து டத்தோ ஆர்.டி ராஜசேகரன் பேசினார்.
முந்தைய வழக்கில் நடந்தது போன்று மீண்டும் நிகழக்கூடாது என்றார் அவர்.
முன்னதாக, அத்தாக்குதலுக்கும் குவான் எங் வழக்கிற்கும் தொடர்பில்லை என போலீஸ் கூறியிருந்தது.
மாறாக, விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருப்பதால், அது ஒரு தெளிவான கொள்ளை முயற்சியே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.