
கோலாலம்பூர், மார்ச்-24 – மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான மித்ரா, AI4CommunityImpact எனும் புதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அதன் தொடக்க விழாவை, மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் (P.Prabakaran) இப்புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார்.
அந்நிகழ்வில் மித்ரா தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி, மைக்ரோஃசோவ்ட் நிறுவனத்தின் பிரதிநிதியாக அடிலா ஜூனிட், Pepper Labs சார்பில் குஹன் பதி, மற்றும் மேஜர் சைஹான் சைனால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நவீன உலகில் டிஜிட்டல் மற்றும் AI தொழில்நுட்பத்தில் இந்தியச் சமூகத்தின் கரங்களை வலுப்படுத்துவதே இப்புதிய முன்னெடுப்பின் நோக்கமாகும்.
அன்றாட வாழ்க்கை முறையில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது.
இந்த AI4CommunityImpact திட்டமானது, மக்கள் AI குறித்து அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அதனை சமூகச் சேவை, கல்வி மற்றும் வியாபாரம் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே மித்ராவின் எதிர்பார்ப்பு என பிரபாகரன் சொன்னார்.
அரசாங்க நிதியில்லாமல், மித்ரா, மைக்ரோஃசோவ்ட் (Microsoft) மற்றும் Pepper Labs ஆகியவற்றுக்கிடையில் வியூக ஒத்துழைப்பை அத்திட்டம் உட்படுத்தியதாகும்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேற இந்த இலவச பயிற்சிக்கு http://microsoft.pepperlabs.my என்ற இணையத்தளத்தில் இன்றே பதிந்துகொள்ளுங்கள்.
வரம்பற்ற கற்றல், மைக்ரோஃசோவ்ட் அங்கீகரித்த சான்றிதழ், எளிதான முறையில் பயன்தரும் டிஜிட்டல் அறிவு ஆகியவை உங்களுக்காகக் காத்திருக்கின்றன.