
நியூ யோர்க், அக்டோபர்-16,
உலக முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், மோர்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியக் குடும்பங்கள் தற்போது சுமார் 35,000 டன் தங்கம் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன் மதிப்பு மட்டும் 3.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறப்படுகிறது.
இந்த மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கு இணையாக இருப்பது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, தங்கம் இந்திய கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
தங்கத்தின் விலை உயர்வு, தலைமுறை வழியாக வந்த முதலீட்டு பழக்கங்கள் மற்றும் பாதுகாப்பு மனப்பாங்கு ஆகியவை, இந்திய குடும்பங்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தில் செல்வம் சேர்க்க வைத்துள்ளன.
உலகம் முழுவதும் பொருளாதார அசாதாரண நிலைக்கு மத்தியில், தங்கம் இந்தியர்களுக்கு நம்பிக்கையின் சின்னமாகவும் நிதி பாதுகாப்பின் அடையாளமாகவும் திகழ்வதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.