
இந்தோர் மத்தியப் பிரதேசம், ஏப்ரல்-10-இந்தியா, மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவமொன்றில், வீட்டில் மீன் தொட்டியை சுத்தம் செய்த போது, ஒரு வயது குழந்தையின் தொண்டையில் மீன் சிக்கிக் கொண்டது.
ஏப்ரல் 3-ஆம் தேதி மூத்த உடன்பிறப்புகள் மீன் தொட்டியைச் சுத்தம் செய்வதை, அருகில் ஆவலுடன் அந்த ஆண் குழந்தை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது, ஒரு சிறிய அலங்கார மீன் திடீரென தண்ணீரிலிருந்து பாய்ந்து, சிரித்துக் கொண்டிருந்த குழந்தையின் வாய்க்குள் நேராகச் சென்றது.
மீன் சுமார் 3 அங்குல நீளத்தில் உயிருடன் இருந்ததால், அது தொண்டையில் சிக்கி, குழந்தை சுவாசிக்க முடியாமல் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
பயத்தில் அலறிய குழந்தைக்கு, வாயில் இரத்தம் கலந்த எச்சில் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதால் குடும்பமே கதி கலங்கிபோனது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், அங்கு மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மூலம், தொண்டையிலிருந்து அந்த மீனை வெற்றிகரமாக அகற்றினர்.
சில நாட்கள் தொடர் சிகிச்சையிலிருந்த குழந்தை தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளது.
மத்திய இந்தியாவில், தொண்டைக்குள் மீன் சிக்கிய 1 வயது குழந்தையின் உயிர் அறுவை சிகிச்சையால் காப்பாற்றப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என மருத்துவர்கள் கூறினர்.



