
ஜகர்த்தா, மார்ச் 21 – இந்தோனேசியாவின் பாலி தீவின் கிழக்கே எரிமலை வெடித்து, எட்டு கிலோமீட்டர் பகுதியில் வானத்தில் கருமையான சாம்பல் பரவியதைத் தொடர்ந்து, அந்த உல்லாச தீவிலிருந்து குறைந்தது ஏழு அனைத்துலக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,703 மீட்டர் உயர இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி ( Mount Lewotobi Laki -Laki ) நேற்றிவு 11 நிமிடங்கள் ஒன்பது வினாடிகள் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது எரிமலையின் எச்சரிக்கை நிலையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது.
இன்று காலை மணி 9.45 மணி நிலவரப்படி, ஏழு அனைத்துலக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன, அவற்றில் ஆறு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஜெட்ஸ்டார் (Jetstar) விமானங்களும், கோலாலம்பூருக்குச் செல்லும் ஏர் ஆசியாவின் ஒரு விமானச் சேவையும் அடங்கும் என பாலியின் நுகுரா ராய் ( Ngurah Rai) அனைத்துலக விமான நிலைய பேச்சாளர் அந்தாதினா தியா (Andadina Dyah ) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான சேவைகளில் பல தாமதமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எரிமலைக்கு மிக அருகில் புளோரஸில் (Flores), மௌமரில் ( Maumere ) உள்ள உள்ளூர் விமான நிலையம் சாம்பலால் பாதிக்கப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள கிராமங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை, ஆனால் கனமழை காரணமாக எரிமலை சேறு படிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அந்த நிறுவனம் குடியிருப்பாளர்களை எச்சரித்தது.