
புத்ராஜெயா, பிப்ரவரி-5-மின்சாதனக் கழிவுகளை மலேசியாவில் இறக்குமதி செய்வது நேற்று தொடங்கி முற்றிலும் தடைச் செய்யப்பட்டுள்ளது.
சுங்கத் துறையின் உத்தரவின் படி இனி எந்தவித விலக்குகளும் வழங்கப்படாது.
மின்கழிவுகள் மலேசியாவில் கொட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணிக் குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
“மின்கழிவுகள் இனி நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது. இதற்கு அனைத்து அரசு நிறுவனங்களும் இணைந்து கடுமையான அமுலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும்” என அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, மின்னணுக் கழிவுகளை ‘முழுமையான தடை’ (absolute prohibition) பிரிவில் சேர்க்க சுங்கத்துறையிடம் விண்ணப்பிக்குமாறு சுற்றுச்சூழல் துறை உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதற்கு முன்பு, இந்த மின்கழிவுகள் ‘நிபந்தனைத் தடை’ (conditional prohibition) பிரிவில் இருந்தன.
அந்த வகையில், சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநருக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மின்கழிவுகளின் இறக்குமதிக்கு விலக்கு வழங்கும் அதிகாரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) அறிக்கையின்படி, 2023 முதல் உலகிலேயே அதிக மின்கழிவுகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மலேசியா உள்ளது.



