
கோலாலம்பூர், பிப்ரவரி-18 – தீபகற்ப மலேசியாவில் முஸ்லீம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டுள்ள மாலை நேரப் பள்ளிகள், வரும் இரமலான் நோன்பு மாதத்தில் மாலை 5.30 மணிக்கெல்லாம் நிறைவடையும்.
அதே சபா, சரவாக் மற்றும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தில் மாலை 5 மணிக்கு பள்ளிகள் நிறைவடையும்.
காலை நேரப் பள்ளிகள் நோன்பு மாதத்தில் வழக்கம் போல் செயல்படுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புனித இரமலான் நோன்பைக் கடைபிடிக்கும் முஸ்லீம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக அந்நேர நிர்ணயம் முடிவாகியுள்ளது.
இரமலான் மாத பள்ளி நேரம் செயல்பாடுகள், கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்க உதவிப் பெறும் பள்ளிகளில் நிலை நிறுத்தப்படுகிறது.
பள்ளி நேரம் தொடர்பான சுற்றறிக்கைகள் பின்பற்றப்படுவதை பள்ளி நிர்வாகங்கள் உறுதிச் செய்ய வேண்டுமென்றும் அமைச்சு கேட்டுக் கொண்டது.
எனவே, சமூக வலைத்தளங்களில் பள்ளி நேரம் குறித்து பொறுப்பற்ற தரப்பினர் பரப்பி வரும் அவதூறுகளைக் கடுமையாகக் கருதுவதாக அமைச்சு கூறியது.
பொது மக்களுக்கும் சமூக ஊடகங்களில் உலா வரும் உறுதிச் செய்யப்படாத தகவல்களை நம்பி ஏமாறாமல், அமைச்சின் அதிகாரப்பூர்வ தகவல்களை நாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.