
கோலாலம்பூர், ஏப் 23 – பண்டன் பெர்டானாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் பிடிபட்ட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் இரட்டை நிலைப்பாடு எதுவும் இல்லை என்று புக்கிட் அமான் கூறியுள்ளது.
கோலாலம்பூரில் போலீஸ் நிலையத் தலைவராக இருந்த 43 வயதுடைய அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் உசேன் ( Razarudin Husain ) தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் எந்த முன்னுரிமையும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை அறிக்கை முழுமையடைந்ததைத் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டார் என Razarudin கூறினார். விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னரே அந்த இன்ஸ்பெக்டரை பினாங்கிற்கு மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. .
மேல் உத்தரவுக்காக போலீசார் காத்திருப்பதால் குறைந்த பணியில் அவர் இருந்துவருவார். அவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட வேண்டுமென எங்களுக்கு பணிக்கப்பட்டால் எவ்வித தயக்கமும் இன்றி நாங்கள் அவர் மீது குற்றச்சாட்டை கொண்டுவருவோம் என Razarudin கூறினார்.
நோக்கத்தோடு குற்றம் புரிந்தவர்கள் பொதுமக்களாக இருந்தாலும் அல்லது போலீஸ் படை உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை காத்திருக்கிறது என அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு எங்களது அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டத்தை மீறியோர் அதற்கான விளைவுகளை எதிர்நோக்க வேண்டுமென Razarudin கூறினார்