
கோலாலம்பூர், ஜூலை 29 – ஜோகூர் பாரு, தாமான் துங்கு துன் அமினாவில் உள்ள அடுக்ககத்தில் 12 வயது சிறுமியின் தலையில் இரும்பு சுத்தியலால் தாக்கி காயம் விளைவித்த 39 வயது ஆடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து ஜூலை 26ஆம் தேதி அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் பல்விர் சிங் ( Balveer singh ) தெரிவித்தார்.
போதைப் பொருள் உட்பட பல்வேறு குற்றப் பின்னணிகளை அந்த சந்தேக நபர் கொண்டுள்ளது விசாரணையின் மூலம் தெரியவந்துள்து. மேலும் அந்த ஆடவன்
Methaphetamine போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் அவனது சிறுநீர் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி உச்சந்தலையில் காயம் மற்றும் வலது கையில் வீக்கம் ஏற்பட்டதால், சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பல்விர் சிங் கூறினார். ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடததப்பட்டு வருகிறது.
தலையில் ரத்தம் வெளியேறும் நிலையில் அச்சிறுமி லிப்டில் ஓடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.