
சிபூ, ஜனவரி-24-சரவாக், சிபூவில் ஓர் இளம் பெண் தன் கைப்பட எழுதியக் கடிதம் சமூக வலைத் தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரது தந்தையும், மாற்றான் தாயும் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
22 வயது அப்பெண், ஜனவரி 18-ஆம் தேதி எலும்புப் புற்றுநோயால் உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன், தந்தைக்கு எழுதிய கடிதத்தில் பல ஆண்டுகளாக வீட்டில் தான் சந்தித்த கடும் சித்ரவதையை அவர் வெளிப்படுத்தினார்.
அந்தக் கடிதத்தை அவரது சகோதரி சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
சிற்றன்னையின் கொடுமையை தந்தை கண்டும் காணாதது போல் இருந்துள்ளார்; அதை விட கொடூரம் என்னவென்றால், மகளின் புற்றுநோய் மோசமானதும் அடிக்கடி மருத்துவனைக்குச் சென்ற தந்தை, அவள் உயிரோடு இருக்கும்போதே கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் இறுதிச்சடங்கு குறித்த ஏற்பாடுகளை கவனித்துள்ளார்.
இந்த விஷயம் மகளின் காதுகளுக்கு எட்ட, அது ஏற்கனவே நோயால் அவதியுறும் அவரை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது.
இப்படி, கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு ஆதாரமாக அடுத்தடுத்து சில வீடியோக்களும் பதிவேற்றப்பட்டன.
இதுவே இறந்த பெண்ணின் கடைசி ஆசையாக இருந்துள்ளது.
கடிதம் வைரலானதும், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி, கோபம், மற்றும் நீதிக் கேட்டு கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, சிறார் சட்டத்தின் கீழ் அப்பெண்ணின் தந்தையும் சிற்றன்னையும் விசாரணைக்காக கைதாகியுள்ளனர்.



