கோலாலம்பூர், டிசம்பர்-2, கடந்த ஜூன் மாதம் தொடங்கி தீபகற்ப மலேசியாவில் இலக்கிடப்பட்ட டீசல் மானிய முறையை அமுல்படுத்தியதன் மூலம், அரசாங்கம் மாதமொன்றுக்கு 600 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்துகிறது.
மிச்சமான அப்பணம், பொது வசதிக் கட்டமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி வசதி மேம்பாடு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் நிறைந்த துறைகளுக்கு பயன்பட்டிருப்பதாக, நிதித் துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் ( Lim Hui Ying) தெரிவித்தார்.
இது நேரடியாகவே மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதாக அவர் சொன்னார்.
மானியம் பெறாத டீசலை, முதல் வாரமான ஜூன் 10-ஆம் தேதி, லிட்டருக்கு 3 ரிங்கிட் 35 சென் என்ற விலையில் அரசாங்கம் மிதக்க விட்டது.
அதற்கு முன், கட்டுப்படுத்தப்பட்ட விலையாக லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாக டீசல் விலை மிதக்க விடப்பட்டிருந்தது.
ஜூனிலிருந்து தற்போது வரை, உதவித் தொகைப் பெறாத டீசல் விலையை அரசாங்கம் லிட்டருக்கு 0.40 சென் குறைத்துள்ளது.
அதன் நடப்பு விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 95 சென்னாகும்.
SKDS 2.0 எனப்படும் மானிய விலையிலான டீசல் கட்டுப்பாட்டு முறையின் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தின் கீழ், டீசலைப் பயன்படுத்தும் 23 வகை தரைப் போக்குவரத்து வாகனங்கள் ‘fleet card’ எனும் மானிய அட்டையின் வழி டீசலுக்கான மானியத் தொகையைத் தொடர்ந்து பெற்று வரும்.
லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென் என்ற மானிய விலையில் அவை மானியத்தை அனுபவிக்கும் என, மக்களவையில் பேசிய போது துணையமைச்சர் சொன்னார்.